மாநாட்டின்போது விபத்தில் உயிரிழந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் குடும்பத்தினரை சந்தித்த விஜய் கண்ணீர்விட்டு அழுதார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாடு நடைபெற்று நேற்றுடன் ஒருமாதம் நிறைவடைந்ததையொட்டி அக்கட்சியின் தலைவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்த மாநாட்டின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தவெக தொண்டர்கள் அணி திரண்டு வந்து பங்கேற்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சில விபத்துகள் நடந்தன. அதில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எக்ஸ் தள பக்கத்தில் விஜய் இரங்கலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவகத்திற்கு, விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினரை நேரில் அழைத்த விஜய் அவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் பேசிய விஜய், “மகிழ்ச்சியாக உங்களை சந்திக்க விரும்பினேன். இப்படி ஒரு சூழலில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கண்ணீர்விட்டு அழுததாக கூறப்படுகிறது. மேலும், ”உங்கள் குடும்பங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன தேவை இருந்தாலும் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்” என்று தெரிவித்த விஜய், ’மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் இந்த குடும்பங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்’ என்றும் அறிவுறுத்தியுள்ளார்.