வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளதால் மீண்டும் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெங்கல் என்ற பெயர் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புயல் நாளை தமிழ்நாடு – புதுச்சேரி கடலோர பகுதிகளான காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயலாகவே கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் அதிதீவிர மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
புயல் கரையை கடக்கும் போது 90 km வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த தாழ்வு மண்டலம் தற்போது 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.