வாடகை டாக்ஸி போன்று இயக்கப்படும் பைக் டாக்ஸிக்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கார், ஆட்டோவை தொடர்ந்து பைக் டாக்ஸி சேவையின் பயன்பாடு முக்கிய நகரங்களில் அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகன விதிகளின்படி இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் விதிகள் மீறப்படுவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரிடம் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதன்படி, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பைக் டாக்ஸி இயக்க தடை இல்லை:
இதற்கிடையே, தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் இயக்குவதற்கு தடை இல்லை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அளித்த பேட்டியில், “மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்ஸிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது . மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. பைக் டாக்ஸிகள் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தற்போது அனைத்து வித வாகனங்களும் தணிக்கை உத்தரவிட்டுள்ளோம். ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்கள் தேவைகளை உணர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதல்படி செயல்படுத்தி வருகிறோம் ” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.