கடலூரா அல்லது கடலா என கேட்கும் அளவிற்கு கடலூர் நகரப் பகுதி திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஆக்ரோஷமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது தென்பெண்ணை ஆறு. ஆறும், கடலும் ஒன்றாகவே காட்சியளிக்கின்றன.
கட்டற்று ஓடும் காட்டாறு போல தென்பெண்ணை பெருக்கெடுப்பதால் கடலூரில் 20 ஊர்கள் தண்ணீர் காடாக காட்சியளிக்கின்றன.
வீடுகள், தண்ணீரால் சூழப்பட்டு தனித்தனி தீவுகள் போல காட்சியளிக்கின்றன. அபாயகரமான அளவாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர். கடலில் மையம் கொண்டிருந்த புயல் கரைக்கு வந்ததால் கடல் அமைதியானது. ஆனால் கரையோ தண்ணீரில் மிதக்கிறது, மக்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள்.
ஆற்றில் இருந்து வரும் நீர் கடலை நோக்கி சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் தந்த மழை காரணமாக, இந்த ஆண்டு கடலூர் நகரப் பகுதி மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. உடமைகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் நிலையில், தாங்கள் கண்ணீரில் மிதப்பதாக கண்ணீருடன் கூறுகின்றனர் மக்கள்.