ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுகவினர் அளித்த அரிசி மூட்டைகளை முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
ஃபெஞ்சல் புயலால் அண்மையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மழை பாதித்த பகுதிகளில் பல்வேறு கட்சியினரும் நிவாரணப் பொருள்களை அளித்து வருகின்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் திமுக நிர்வாகிகள் வழங்கிய ஒன்றரை லட்சம் கிலோ அரிசியை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து முதலமைச்சர் அனுப்பி வைத்தார்.
இதனிடையே ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர், பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளத்தின் காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் அளித்தார்.