விசிகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து, திருமாவளவன் தவறிழைத்துவிட்டார் என்று திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 6ஆம் தேதி புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், மத்திய மாநில அரசுகளை சாடினார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இந்திய ஜனநாயக உரிமை தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். மேலும் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றும், மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் மத்திய பாஜக அரசை ஒற்றை வரியில் மட்டும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் கணக்குகளை மக்களே மைனசாக்கி விடுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் அந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக்கூடாது என தெரிவித்தார். விசிக பொதுச்செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு பல அரசியல் தலைவர்களும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இயக்குநர் அமீர், இதுவரை நான் பார்த்திராத திடீர் அரசியல்வாதியாக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். செல்வந்தர்களின் திடீர் அரசியலுக்கு வருகை தருவது தமிழ்நாட்டுக்கு ஆபத்து என குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், மன்னராட்சி முறை தொடருகிறது என்றால், எதற்கு 2026-ல் தேர்தல் வருகிறது? என்று கேள்வி எழுப்பினார். இந்தியா கூட்டணியில் இருந்து விசிகவைப் பிரிக்க நினைப்பது, தேசிய அரசியலில் இருந்து திருமாவளவனை பிரிப்பதற்கு சமம் என்றும் அவர் கூறினார். மேலும் ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் திருமாவளவன் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாகவும் அமீர் கூறினார்.