கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று (டிச.2) எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
வங்கக்கடலில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான காலத்தில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது காற்றின் வேகம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்தது. சில நேரங்களில் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது. இதனைத் தொடர்ந்து, 12 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் புயல் சின்னம் நிலவிவந்தது. இந்நிலையில், நேற்று (டிச.1) காலை 11.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாட்டில் நிலவக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக நாளையும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அந்தந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று (டிசம்பர் 2) விடுமுறை அறிவித்துவருகிறார்கள். அதன்படி இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு: –
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
1.திருவண்ணாமலை
2.விழுப்புரம்
3.கடலூர்
4.கள்ளக்குறிச்சி
5.கிருஷ்ணகிரி
6.ஊட்டி, கூடலூர், கோத்தகிரி தாலுகா (நீலகிரி மாவட்டம்)
7.செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் வட்டம் (செங்கல்பட்டு மாவட்டம்)
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
1.வேலூர்
2.ராணிப்பேட்டை
3.திருப்பத்தூர்
4.தருமபுரி
5.சேலம்
6.கொல்லிமலை பகுதி (நாமக்கல்)
இப்படியாக தமிழகத்தில் இன்று (டிச.2) 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, புதுச்சேரியில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பள்ளிகள் இயங்கும்
காஞ்சிபுரத்தில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளை தவிர, மற்ற பள்ளிகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில், இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.