
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு அண்ணாமலை தந்த பேட்டியில், “தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்” என்றார்.
மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்துச் சென்றது.
இந்த நிலையில், மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.
“சுரங்கம் வராது என்கிற உறுதிமொழியை கொடுத்தோம். அதைக் காப்பாற்றி இருக்கிறோம். அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் செய்திக்குறிப்பு வரும்.” என்று அண்ணாமலை கூறினார்.
இந்நிலையில் தற்போது மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.