சென்னையில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழக பகுதிகள் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (7-01-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (7-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இன்று இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.