கார்த்திகை தீபம் வரும் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். தீபத்தன்று அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவது முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. இதனைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநில மக்களும் அதிகளவில் அங்கு கூடுவர்.
வழக்கமாக மகா தீபத்திற்கு திருவண்ணாமலை மலை மீது 2,500 பேர் வரை மலை ஏற அனுமதிக்கப்படுவர். ஆனால், இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தன. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதனால், தீபத் திருநாள் அன்று மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா எனும் கேள்வி எழுந்தது. மலை ஏற உகந்த சூழல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிவிக்கப்படும் என அரசும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், “அண்ணாமலையார் மலையின் மேற்பகுதியும், பாதையும், மலையும் அதிக ஈரப்பதத்துடன் இருக்கிறது. எனவே மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது. வழக்கமாக தீபம் ஏற்றுபவர்கள், கொப்பரை எடுத்துச் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
மலை மீது தீபம் ஏற்ற இரு பாதைகள் உள்ளன. அதில் ஒரு பாதை மலை மீது ஏறிச் செல்ல உகந்ததாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே அந்தப் பாதையில் இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கீழே தீயணைப்புத்துறை, காவல்துறை, மருத்துவர்கள் உள்ளிட்டோர் தயார் நிலையில் இருப்பர்.
தடையை மீறி பக்தர்கள் யாரும் மலை மீது ஏற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. தடையை மீறி யாரும் மலை மீது செல்லாமல் இருப்பதற்கு வனத்துறையினரும், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்” என்று தெரிவித்தார்.