அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத அதிமுக, 7 இடங்களில் டெபாசிட் இழந்தது. இதனால், அடிமட்டத்தில் கட்சியை பலப்படுத்த மூத்த நிர்வாகிகள் 10 பேர் அடங்கிய கள ஆய்வுக் குழுவை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார்.
இந்த குழு, தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கட்சியின் நிலவரங்களை ஆய்வு செய்து, எடப்பாடி பழனிசாமியிடம் விவரங்களை தெரிவித்துள்ளது. இந்த கள ஆய்வின் முடிவுகள் பொதுக்குழுவில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உட்கட்சித் தேர்தலை நடத்துவது, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தொடர்பான தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி வியூகங்கள் அமைக்கும் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கருதப்படுகிறது.
தேர்தலுக்கு தயாராவதில் அடுத்த 15 மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த பொதுக்குழு அதிமுகவினரை உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கும் என முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆனால், தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய இடத்தில் உள்ள அதிமுக தலைமை, பொதுக்குழுக் கூட்டத்தில் அடிமட்ட நிர்வாகிகளை பேசவைத்து அவர்களின் மனநிலையையும் அறிந்து கொள்ள வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான அடித்தளமாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் அமையுமா? முக்கிய முடிவுகள், அதிரடி மாற்றங்கள் நிகழுமா என்பதை தமிழ்நாடு அரசியல் களம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.