பெரியார் பேசியதாக சீமான் கூறிய சர்ச்சைக் கருத்துக்கு ஆதாரம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “சீமான் சொல்வதைப் போன்று பெரியார் பேசவில்லை என்று சிலர் மறுக்கின்றனர். ஆனால், அவர் அப்படித்தான் பேசினார். அதற்கான ஆதாரங்களை சீமானுக்கு நான் கொடுக்கிறேன்.
பெரியார் எங்கே அப்படியொரு கருத்தை கூறியுள்ளார். எந்த புத்தகத்தில் கூறினார் என்ற ஆதாரத்தை நான் வழங்குகிறேன். பெரியார் பேசிய பல விஷயங்களை இன்று பேசினால், மக்களிடையே அருவருப்பு வந்துவிடும்.
சீமான் சொன்ன கருத்தை நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காலம் கடந்துவிட்டது. அரசியல் மாறிவிட்டது. மக்கள் புதிய பார்வையில் பயணிக்கின்றனர். பெரியார் ஒரு காலத்தில் பேசியதை எல்லாம் பொதுவெளியில் இப்போது எடுத்தால் தவறாகிவிடும். ஆனால், சீமான் அண்ணனைத் தேடி போலீஸ் வந்தால், அந்த ஆதாரத்தைக் கொடுத்தால் போதும்” என்று அண்ணாமலை அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சட்டத்துறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்த புகாரில், பெரியார் குறித்து சீமான் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு மாவட்டங்களிலும் காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு!