சென்னையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில், இரும்பின் தொன்மை என்ற நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார். அதேப் போன்று கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டும் முதலமைச்சர், கீழடி இணையதளத்தினை தொடங்கி வைக்கிறார்.
“இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருக” என்று பதிவிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் அவர், ”நாளை (ஜன 23) முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் வருகை தரவேண்டும், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” என கூறியிருந்தார். கீழடி குறித்த முக்கியமான தகவலை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.