நடிகர் விஜய் பாஜகவை எதிர்ப்பது இந்த காரணத்தால் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்க வகையில் உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அம்பேத்கர் பிறந்த இடம், வாழ்ந்த இடம் என லண்டன் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நினைவுச் சின்னங்களை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்பேத்கரை சிறுமைப்படுத்திய சிறுநரி கூட்டம் காங்கிரஸ்.
‘அம்பேத்கரை வைத்து எதிர்க்கட்சிகள் நாடகம்’
தமிழ்நாடு அரசு அம்பேத்கரை வைத்து நாடகம் ஆடுகிறது. அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால் மூன்றரை வருட தமிழக அரசின் திட்டங்களில் ஒரு திட்டத்திற்காவது அம்பேத்கர் பெயரை வைத்துள்ளார்களா? முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லி அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ரூ.944 கோடியை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது சுமார் 2 லட்சம் வீடுகள் என்றால் வீட்டுக்கு ரூ.45 ஆயிரம் கொடுக்க வேண்டும். ஆனால் ரூ.2000 மட்டுமே கொடுத்துள்ளார்கள். இது யாரை ஏமாற்றுவதற்கு…?
இந்துகளுக்கு ஆதரவான போராட்டத்திற்கு அரசு அனுமதி தர மறுக்கிறது. தமிழகத்தில் காவல்துறை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாட்டு நலனுக்கு எதிராக தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. கோவை குண்டுபிடிப்பு சம்பவத்தில் 51 பேரை கொலை செய்ய காரணமாக இருந்தவர். அவரது இறுதி ஊர்வலத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அங்கே பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்று கூடி உள்ளனர், இது கண்டிக்கத்தக்கது.
விஜய் குறித்து ஹெச். ராஜா…
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அரசியல் ஒரு பிரம்மை. பிரிவினைவாதம் பேசினால், பாஜகவுக்கு எதிராக பேசினால் தமிழகத்தில் வாக்கு விழும் என பிரம்மை உள்ளது. விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்து நீட் தேர்வுக்கு எதிராக பேசுகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக மட்டுமே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. பாஜக அரசு நீட் தேர்வை கொண்டு வரவில்லை.
மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்றால் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் என்ன கூறுகிறதோ? அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். பாஜக அரசுக்கு எதிராக பேசினால்தான் தமிழகத்தில் வாக்கு விழும் என்று மற்றவர்கள் நினைத்து பேசுகிறார்கள். அதேபோல நடிகர் விஜய்யும் நினைத்து பேசுகிறார்.
டங்ஸ்டன் சுரங்கம் – ‘திமுக எதிர்ப்பது இதனால் தான்!’
மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தின் மீது மக்களுக்கு அச்சம் இருந்தால் மத்திய அரசு அது குறித்து பரிசீலிக்கும். மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை (Madurai Tungsten Mining) வேதாந்தா நிறுவனம் எடுத்ததால் மட்டுமே திமுக அரசு எதிர்க்கிறது. டங்ஸ்டன் சுரங்கம் மக்கள் வேண்டாம் என கூறுவதால் திட்டத்தை நிறுத்துவதற்கு மத்திய அமைச்சர் கிசன் ரெட்டியிடம், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது. மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்து மத்திய அரசு நல்ல அறிவிப்பை வெளியிடும். அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.