கேரளா மருத்துவக் கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு.
நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசே அகற்ற தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், நடுக்கல்லூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் கேரள மாநில மருத்துவக் கழிவு உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாகத் தானாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் நான்கு கிராமங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவு உள்ளிட்ட கழிவுகளை கேரள மாநில அரசே பொறுப்பேற்று உடனடியாக அகற்ற வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் என அம்மாநில அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இல்லையெனில், கழிவுகளை மேலாண்மை செய்யும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வழக்கு விசாரணையின் போது ஆஜரான கேரள மாசுக் கட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர், கழிவுகளைக் கொட்டியது தொடர்பாக கழிவுகளுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.