தந்தை பெரியார் சொல்லாத ஒன்றை, அவர் பேசியதாக கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து திமுக பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மனித குலத்தின் சமூக விடுதலைக்கான மாபெரும் தலைவர் தந்தை பெரியார். தன் வாழ்நாளின் கடைசி நாட்கள் வரை சமூகநீதிக்காகச் சளைக்காமல் பாடுபட்ட திராவிட இயக்கப் பெருந்தலைவர் அவர். தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை எவருக்கும் அஞ்சாமல் துணிந்து கூறியவர். அவருடைய பகுத்தறிவு – சுயமரியாதைச் சிந்தனைகள் சமுதாயத்தின் இருட்டை விரட்டி வெளிச்சத்தை உண்டாக்கின. தன்னுடைய கருத்துகளாகவே இருந்தாலும் அதனைக் கேட்பவர்கள் தங்களுடைய சொந்த புத்தியினால் சிந்தித்து, அதன் பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியார்.
மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவருடைய கொள்கை உறுதியின் விளைவாக, தேர்தல் களத்தையே காணாமல் தன் இலட்சியங்களை அரசாங்கத்தின் சட்டங்களாகத் திட்டங்களாக மாறச் செய்து, தான் வாழும் காலத்திலேயே அவை நிறைவேறிடக் கண்டவர்.
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என அவரைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார். கொள்கையில் எதிர்துருவமாக இருந்த ராஜாஜி, ‘என் அன்பான எதிரி’ என்று பெரியாரைப் பாராட்டினார். அவரோடு முரண்பட்டவர்களும்கூட அவருடைய தூய தொண்டினை, போராட்டக்குணத்தை, ஒளிவுமறைவின்றிக் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மையைப் புகழ்ந்திடத் தவறவில்லை. “ஈ.வெ.ரா.பெரியார் இந்த மண்ணின் மணாளர்” என்று புகழ்ந்துரைத்தார் அக்கிரகாரத்து அதிசய மனிதரான வ.ரா.
உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள், தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் தந்தை பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். அவருடைய தொண்டினைப் போற்றுவார்கள். பெரியார் எந்த நேரத்தில், எந்தச் சூழலில், என்ன சொன்னார் என்று பெரியார் சொன்ன பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்துச் செயல்படுவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து, பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான். தந்தை பெரியாரின் இலட்சியத்தை அரசியல் வழியில் முன்னெடுத்தார் பேரறிஞர் அண்ணா. அப்போது இரு இயக்கங்களுக்குமிடையிலான கருத்து மோதல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான், 1967-இல் பெரியாரின் வாழ்த்துகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்றார் பேரறிஞர் அண்ணா.