அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை நிகழ்வை கண்டித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராஜசேகரன், திமுக நிர்வாகி என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சில புகைப்படங்களை வெளியிட்டதுடன், அவரை காப்பாற்ற திமுக அரசு திட்டமிடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் குற்றவாளி ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என திமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் திமுகவிற்கு எதிராக பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே சபதம் எடுத்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இனி காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்து, செருப்பை கழற்றிப் போட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அடுத்த 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் அறுபடை வீடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முருகனிடம் முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.