தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகப்படுத்தும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனைகளை வழங்கும் புதிய மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பல்வேறு பாலியல் குற்றங்களுக்கு ஆயுள், மரண தண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது.
இந்த சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறிய நிலையில் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதை தொடர்ந்து இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதும் சட்டமாக அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.