அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு மற்றும் சாட்சியங்கள் விவரத்தை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்காததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த முறை பதில் சொல்வதாக தமிழ்நாடு அரசு கூறியதால் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால் தற்போது வரை பதில் அளிக்கப்படவில்லை என கூறிய நீதிமன்றம், அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என மாநில அரசு கூறியதன் அடிப்படையிலேயே உத்தரவை மாற்றியதாகவும் ஆனால் அதை மதிக்கவில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு மற்றும் சாட்சியங்கள் விவரத்தை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சாட்சிகளில் மொத்தம் உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.