
தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு வரும் பிப்ரவரி இரண்டாம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது. முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட அக்கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இரண்டு கட்டங்களாக கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள விஜய், இன்று நடைபெறும் கூட்டத்திற்கு 50 விழுக்காடு மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், கட்சி பதவிக்காக நிர்வாகிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். யாராவது பணம் வாங்கியதாக ஆதாரம் கிடைத்தால் அவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ஆனந்த் தெரிவித்தார்.