சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு, தமிழக அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரரானார். அவரிடம் போலிசார் விசாரணை.
2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, அவரது மகன் கௌதம் சிகாமணி உடன் இணைந்து 5 குவாரிகள் லைசன்ஸ் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றசாட்டு எழுந்தது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறை கிராமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்த தன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்ட 8 நபர்கள் மீது, கடந்த 2012 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி அவரது மகன் எம்.பி கௌதம் சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர், சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத ரூ. 81 லட்சம் பணம், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வங்கி கணக்கில் வைத்திருந்த 41 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
மேலும், இந்த சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மூன்று முறை சம்மன் அளித்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி ஆகியோரிடையே சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதில் கௌதம சிகாமணியின் உறவினரான கே.எஸ் ராஜா மகேந்திரனின் அசையா சொத்துக்கள் 5.74 கோடி ரூபாய் மற்றும் கௌதம் சிகாமணியின் மனைவி தொடர்பான நிறுவனம் தொடர்புடைய அசையும் சொத்துக்களும், குறிப்பாக வைப்பு நிதி மற்றும் வங்கி கணக்கில் இருக்கும் தொகை என 8. 74 கோடி ரூபாய் பணமும் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்து அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதனடிப்படையில் இன்று காலை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி இன்று காலை 11.20 மணிக்கு விசாரணைக்காக ஆஜராகினார்.
இவரிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். முழுமையான விசாரணைக்கு பிறகே கனிம வள ஊழல் குறித்த ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடியிடம் காலை 11.30 மணி முதல் நடைபெற்று வந்த 5.30 மணி நேர விசாரணை மாலையில் நிறைவுற்றது.