அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.
“எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சு தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
மக்களவை இன்று காலை கூடியதும் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அம்பேத்கரின் புகைப்படத்தை ஏந்தியபடி அவர்கள் “ஜெய் பீம், ஜெய் பீம்” என முழக்கமிட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு, அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, தன்னை போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு அம்பேத்கர் கடவுளுக்கு குறைவானவர் இல்லை என்றார். அம்பேத்கரை இழிவுப்படுத்தும் வகையில் அமித்ஷா பேசி உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அதில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுபவர்கள், புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள், அம்பேத்கர் பெயரை தான் சொல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.