பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்தார். அரசியல் படிப்புக்காக லண்டன் சென்று வந்த பிறகு முதல் முறையாக ஆளுநரை அவர் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு மீதான புகார்களை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை அளித்திருக்கலாம் எனவும், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டது குறித்து ஆளுநருடன் அண்ணாமலை விவாதித்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கருத்து, தற்போதைய அதிமுகவின் நிலையை காண்பிப்பதாக கூறினார்.
2026-இல் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, கூட்டணி இல்லை என மறுப்பு தெரிவிக்காத அண்ணாமலை, “பொறுத்திருந்து பாருங்கள்” என பதில் அளித்தார். மேலும், “நேரமும் காலமும் இன்னும் நிறைய இருக்கிறது” எனவும் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
திமுகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நல்லாட்சி அமையும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.