தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது; “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகை தென்கிழக்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 30-ம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு முதல் நாளை காலை வரையிலான காலகட்டத்தில் தற்காலிக புயலாக வலு பெறக்கூடும். அதன்பிறகு அது வலுவிழந்து கரையைக் கடக்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக்கூடும்.
கரையைக் கடக்கும்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அவ்வப்போது மணிக்கு 70 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
29-ம் தேதி:
டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
30-ம் தேதி:
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
1-ம் தேதி:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
காற்று:
இன்று முதல் நாளை மாலை வரை வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அவ்வப்போது 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் 30-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை பதிவான மழையின் அளவும் 350 மி.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பு 346 மி.மீ. எனவே இது இயல்பை ஒட்டி உள்ளது.
சென்னையில் இன்று இரவு முதல் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.