சொட்டவனம் கிராம மக்கள் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடக்கும் அவலநிலை, ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அடிப்படை தேவைக்காக ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து வருகின்றனர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சொட்டவனம் கிராமத்தில் மணிமுத்தாற்றின் தென்கரையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் வெள்ளாறு, நரிஓடை, மணிமுத்தாறு உள்ளிட்ட நீர்நிலைகள் நடுவே தீவு போல் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் 60க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக கடந்த ஒருவார காலமாக அடிப்படை தேவை உணவு, குடிநீர், விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்தவும், தினசரி காய்கறி பயிர்களை விற்பனை செய்யவும் ஆபத்தான முறையில் மரக்கட்டைகளை கொண்டு தெப்பம் போல் அமைத்து மணிமுத்தாற்றை கடந்து நீந்தியபடியே மூட்டைகளை எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் 50 குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மணிமுத்தாற்றில் பாலம் கட்டித்தர வேண்டுமென்றும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.