கனமழை காரணமாக நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி அருகில் நேற்றிரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான காலத்தில் கரையைக் கடந்தது.
புயல் கரையை கடந்த போது காற்றின் வேகம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்தது. சில நேரங்களில் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது. இதனைத் தொடர்ந்து, 12 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் புயல் சின்னம் நிலவிவந்தது. இந்நிலையில், காலை 11.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அது தற்போது கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அது மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து, 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக புதுச்சேரியில் 47 செ.மீ மழை பெய்தது. புதுவையின் பல இடங்களிலும் கனமழை காரணமாக வெள்ளநீர் புகுந்தது. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், ஃபெஞ்சல் புயலால் அம்மாவட்டம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் புதுச்சேரி தத்தளித்து வரும் நிலையில் விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, இன்றும் நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு இன்னும் முழுமையாக சீராகவில்லை. கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்திருப்பதால் அந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்து அறிவிக்கலாம்.