தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று, ‘ஃபெங்கல்’ புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதன் பிறகு, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும்போது, புயல் வலுவிழந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பொழிவு இருந்துவருகிறது.
புதுச்சேரியிலும் தொடர் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வியாழக்கிழமை (28/11/24) விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி யூனியன் பிரதேச கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.