தமிழ்நாடு முழுவதும் பூண்டு, முருங்கைக்காய், வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், ஒரு கிலோ பூண்டு 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போன்று, சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்-க்கு விற்கப்படுகிறது. இதனால், ரசம் வைக்க முடியவில்லை என இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கனமழையால், மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு விலை வரத்து குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று சென்னை கோயம்பேட்டில் முருங்கைக்காய் ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், ஒரு முருங்கை காய் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டை பொறுத்தவரை, கன்னியாகுமரியில் ஒரு கிலோ 470 ரூபாய்க்கும், விருதுநகரில் 450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதே போன்று, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டையில் ஒரு கிலோ பூண்டு 400 ரூபாய்க்கும், திருச்சியில் 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தேனி மற்றும் கோவையில் 240 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை ஒரு கிலோ பூண்டு விற்பனை செய்யப்படுகிறது.