திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலை கிராமமான நாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட உமையப்பநாயக்கனூர் ராமகவுண்டர்வட்டம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விளைவிக்கக் கூடிய பொருட்களை தினந்தோறும் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி அவர்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு சாலை வசதி இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்பட்டு வருகின்றனர் இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மனோகரன் என்பவர் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மழை காலங்களில் சிரமப்படக் கூடாது என்பதற்காக தனது 15 சென்ட் இடத்தை ஊராட்சி நிர்வாகத்திற்கு தானமாக தந்துள்ளார்.
இந்த இடத்தைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி நிர்வாகம் 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை சாலை வசதி ஏற்படுத்தித் தராமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் மண் சாலை மிகவும் சேறும் சகதியுமாக உள்ளதால் நடந்து செல்ல முடியாத அளிவிற்கு மோசமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனூர் ஊராட்சி பகுதியில் கடந்த 1 ஆண்டுகளாக சாலைகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மழை காலங்களில் சாலை வசதியின்றி அவதிப்படுவதாக மனுக்கள் கொடுத்துள்ளனர். விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்தார்.