திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இருவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது. மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் 9வது தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டன. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா மற்றும் உறவுக்கார சிறுமிகள் மகா, ரம்யா, வினோதினி ஆகியோர் சிக்கி உயிரிழந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் நீண்டநேரப் போராட்டத்திற்கு பின்பு, நேற்று மாலை மீனா, மகா, கவுதம், இனியா, மற்றும் வினோதினி உடல்களை மீட்டனர். உடல்கள் அனைத்தும் பாகம் பாகமாக மீட்கப்பட்டது அங்கிருந்தவர்கள் கண்ணீரில் கண்ணீரை வரவழைத்தது.
எனினும், ராஜ்குமார், ரம்யா என்கிற இருவரின் உடல்கள் மீட்கப்படவில்லை. அவர்களை மீட்பதில் தொய்வு இருப்பதாக கூறி உறவினர்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, 2 பேரின் உடல்களையும் விரைவாக மீட்டுத் தரக்கோரிக்கை விடுத்தனர்.
நிலச்சரிவில் சிக்கியிருந்த வீட்டில் 5 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பாறைகள் தென்பட்டன. அது மிகப்பெரிய பாறைகள் என்பதால், ஜேசிபி கொண்டு பாறைகளை அகற்றும் பணி தொடங்கியது. மிகுந்த சிரமத்திற்குப் பின், மீதமுள்ள இருவரின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பாறைக்கு அடியில் அவர்கள் இருக்கலாம் என யூகிக்கப்பட்டது.
இதையடுத்து மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, இன்று மீண்டும் தொடங்கப்பட்டன. அதன்படி, பாறைகள் அகற்றப்பட்ட நிலையில் இருவரின் உடல்கள் அங்கே தென்படவில்லை. இதனால், வேறு இடங்களில் உடல்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
அதன்படி, நீண்ட போராட்டத்துக்கு பின் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இன்று மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் வீட்டின் வாசல் அருகே கிடைத்தன. 3 நாள் நடந்த மீட்புப்பணியின் மூலம் இடிபாடுகளில் சிக்கிய 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் கூட உயிருடன் இல்லை. அனைவரும் சடலமாகவே மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.