தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டார்.
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக கடந்த மாதம் ஐந்து கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3 நாட்களுக்கு முன் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை ஜெ.ஜெ.நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.
விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா போதைப்பொருளை வாங்கி வந்து, சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும், கஞ்சா மட்டுமின்றி மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதன்பின் அந்த மாணவர்களின் செல்போன்கள் நடத்திய சோதனை மூலம் யாரெல்லாம் கஞ்சா வாங்கியது என கண்டறியப்பட்டு அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் போன் நம்பரும் இருக்க, அவரை நேற்று தனிப்படை போலீஸார் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உட்பட 7 பேர் மீது போதைப்பொருள் வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.
உயர்ரக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்படுத்தியதாக மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மன்சூர் அலிகான் மகன் அலிகான், ரியாஸ், சந்தோஷ், குமரன், பாசில் அகமது, சையது, யுகேஷ், ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.