நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள முத்தோரை மாதா கோவில் பகுதியில் வசிப்பவர் பிரவீன். இவர் 12ஆம் வகுப்பு வரை பயின்று, வறுமை காரணமாகக் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டவர். இவருடைய பெற்றோர்கள் கூலி வேலை செய்கின்றனர்.
சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட பிரவீன், கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்த பொழுது அரிசியின் மூலமாக முதலில் திரைப் பிரபலங்களின் முக அமைப்பை வரைந்துள்ளார். அதன் பின்னர் யாருடைய புகைப்படத்தைக் கொடுத்தாலும் பத்து நிமிடத்தில் அரிசியின் மூலமாக அவர்களது புகைப்படத்தை ஓவியம் ஆக்குவார்.
மேலும், மரத்திலிருந்து விழும் இலைகளைக் கொண்டும், தாவர இலைகளைக் கொண்டும் அந்த இலைகளில் பலருடைய முக அமைப்புகளைச் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார். மேலும், மெழுகுவர்த்தி வெப்பத்தைப் பயன்படுத்தி இவர் உருவாக்கும் பல்வேறு ஓவியங்களும் சிறப்பானதாக உள்ளது.
அதுமட்டுமின்றி ஒருவருடைய முக அமைப்பினை, அவர்களுடைய பெயரை மட்டுமே எழுதி அவர்களுடைய முக அமைப்பினை வரைந்து விடுவார். இவர் வரைந்துள்ள அப்துல்கலாம் பெயர் ஓவியம் மிகவும் அருமையானதாகக் காட்சியளிக்கிறது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரவீன் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பிரவீன் கூறுகையில், “ஓவியம் வரையும் பணிகளுக்காகப் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தங்கி பணிபுரிந்து வருகிறேன். பல்வேறு தரப்பினரும் அரிசியின் மூலமாகவும், இலைகளிலும் ஓவியங்களை விரும்புகின்றனர். அவ்வாறு அவர்கள் விரும்பு வகையில் ஓவியத்தை வரைந்து அவர்களுக்குக் கொடுப்பேன். இதற்கு அவர்கள் ரூபாய் 500 வரையிலும் கொடுக்கின்றனர்.
சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் உண்டு. புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் அரிசி ஓவியம், இலை ஓவியம் ஆகியவற்றைச் செய்து வந்தேன். சுமார் பத்து வகைகளுக்கு மேல் ஓவியங்கள் வரைகிறேன். காலி பாட்டில்களை வைத்தும் ஓவியம் ஆக்கி உள்ளேன்.
மேலும் தீக்குச்சிகள் மூலமாகவும், விரல்கள் மூலமாகவும், நிழல் ஓவியங்கள், பெயர் ஓவியங்கள் என 20க்கும் மேற்பட்ட விதங்களில் ஓவியம் வரைந்து வருகிறேன். நான் மட்டுமே பணிக்குச் சென்று குடும்பத்தைப் பராமரித்து வருகிறேன். அரசின் மூலமாக ஏதேனும் பணி வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பிரவீனின் தாய் சுகிர்தா கூறுகையில், “நாங்கள் முத்தோரை பகுதியில் வசித்து வருகிறோம் சிறு வயது முதலே எனது மகன் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். கொரோனா காலகட்டத்தின் பிறகு பல்வேறு விதங்களிலும் ஓவியங்கள் வரைவதில் முழு முயற்சி எடுத்துச் சிறப்பாகச் செய்து வருகிறார். எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு ஏதேனும் வழி காட்டினால் வசதியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.