பெஞ்சல் புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் உள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழியும்.
சென்னையின் குடிநீர் ஆதாரம்
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீர் திருநீர்மலை, குன்றத்தூர், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், மணப்பாக்கம், நத்தம் வழியாக ராமநாதபுரம், நத்தம் பக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரம் சென்றடைகின்றது.
ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றினால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள பகுதியில் 24 மணி நேரத்தில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி கொள்ளளவை கொண்ட நிலையில் தற்போது நீர் இருப்பு 19 .29 அடியாக காணப்படுகின்றது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் ஆனால் தற்போது 2268 டிஎம் சியாக உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 449 கன அடி காணப்படுகின்றது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணி
குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புயல் உருவாகியதால் புதுவை மற்றும் காரைக்கால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,, கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
நேற்று முதலே திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.