முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் கைகளால் ‘கலைஞர்’ விருது பெற்றார் நடிகர் சத்யாரஜ்!
சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை பொன்விழாவில் நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவையின் பொன் விழா ஆண்டு இசை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கி, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அவர்களின் வாழ்க்கை சரிதம் நூலை வெளியிட்டார்.
இந்த விழாவில்:
கலைஞர் விருது நடிகர் சத்யராஜ் அவர்களுக்கும்,
இயல் செல்வம் விருது ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களுக்கும்,
ராஜ ரத்னா விருது திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்,
இசைச் செல்வம் விருது முனைவர் காயத்ரி கிரீஷ் அவர்களுக்கும்,
நாதஸ்வரச் செல்வம் விருது திருக்கடையூர் டி.எம்.எஸ். உமாசங்கர் அவர்களுக்கும்,
தவில் செல்வம் விருது சுவாமிமலை சி.குருநாதன் அவர்களுக்கும்,
கிராமிய கலைச் செல்வம் விருது முனைவர் தி.சோமசுந்தரம் அவர்களுக்கும்,,
நாட்டியச்செல்வம் விருது – பார்வதி ரவி கண்டசாலா அவர்களுக்கும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசினார்.
விழாவில் கலைஞர் விருது பெற்ற நடிகர் சத்யராஜ் ஏற்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “நான் வாங்கிய ஒவ்வொரு விருதும் கலைஞர் கையில்தான். முதல் விருது, சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்திற்காக வில்லன் விருது. வில்லனாக அறிமுகமான நான், அதற்கான விருதை கலைஞர் கருணாநிதியிடம்தான் பெற்றேன். அதன்பிறகு, கதாநாயகனாக முதல் விருதும் அவரிடம்தான் பெற்றேன்.
தற்போது முதன்முறையாக கலைஞர் பெயரில் அதுவும் முதலமைச்சர் கையில் இருந்து பெற்றுள்ளேன். பிற மாநிலங்களுக்கு சென்றால், அதன் தலைநகரம்தான் அழகாக இருக்கும். ஆனால் உட்புறம் பயணித்தால் அதன் நிலை வேறுமாறி இருக்கும். ஆனால் தமிழ்நாடு அப்படியல்ல, எங்கும் பார்த்தாலும் ஒரே மாறி இருக்கும். வளர்ச்சி இருக்கும்.
பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வர காரணம் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்ததே! திராவிட இயக்கத்தால்தான் இந்த வளர்ச்சி உள்ளது. பிற மாநிலத்தவர்களிடம் நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு காரணம் திராவிடத் தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் என்று நாமே சொல்லி கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.
தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ஆபத்தானது – நடிகர் சத்யராஜ்
தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது முதலமைச்சர் மேடையில்… “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்தமிழ் பேரவை இவ்வளவு பெருமையுடன் இன்று உள்ளது. இந்த அமைப்பு தொடங்கிய நாளில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி அவர்களே நேரில் வந்து விருது வழங்கி பாராட்டுவார். அந்த வகையில் நானும் தொடர்ந்து இந்த விழாவில் பங்கேற்று வருகிறேன்.
இந்த விருது வழங்கும் விழாவில் கலைஞர் பெயரில் விருது வழங்க வேண்டும் என்ற கடந்த வருடம் கூறினேன். இந்த ஆண்டு விழாவில் அதை நிறைவேற்றி இருக்கிறார்கள். கலைஞர் பெயரில் நடிகர் சத்யராஜுக்கு விருது வழங்குவது எனக்கு பெருமையாக உள்ளது.
கலைத்துறையில் இருந்து கொண்டு பகுத்தறிவு உணர்வை, சுயமரியாதை எண்ணத்தை திராவிட கொள்கைகளை மறைக்காமல் துணிச்சலாக பேசக் கூடியவர் சத்தியராஜ். கலைஞரின் வசனங்களைப் பேசி பழகியவர், இன்று நடிகராக இருப்பதற்கு கலைஞரே காரணம் என்று பல மேடைகளில் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட சத்யராஜுக்கு இந்த விருது வழங்குவது பெருமையாக இருக்கிறது.
மற்ற விருதுகளை பெற்றவர்களும் சிறந்து விளங்க கூடியவர்கள். முத்தமிழிலும் சிறந்து விளங்கியதால்தான் முத்தமிழ் அறிஞர் என்று கருணாநிதி அழைக்கப்படுகிறார். கலைஞர் பேசினால் அதில் இசை நயம் இருக்கும்; அவர் எழுத்தை வாசித்தால் இசைபோல் இருக்கும்.
மனோகரா வசனம் இசைபோல் இருக்கும் என்பதை என் மகள் செந்தாமரை நாட்டிய அரங்கேற்றத்தில் இளையராஜா பாடிய போது ரசித்தேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே நம் முழக்கம்; இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும்; செழிக்க வேண்டும். இடையில் சாதி, மதம் என்ற பெயரில் அந்நிய மொழிகள் மூலம் பண்பாட்டு தாக்குதல்கள் நடந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் நின்று நிலைக்க தமிழின் வலிமையும், பண்பாட்டின் சிறப்பும்தான் காரணம். தமிழ் மொழியை நம் கண் போல காக்க வேண்டும். தற்பொழுது பொன்விழா கண்டுள்ள முத்தமிழ் பேரவை, நூற்றாண்டு காண வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.