பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பழமையான தேவாலய திறப்பு விழாவில் பங்கேற்க ட்ரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் வந்துள்ள நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரிஸில் உள்ள 900 ஆண்டுகள் பழமையான நோட்டர் டாம் (Notre-Dame) தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு முன் பயங்கர தீ விபத்தில் பலத்த சேதமடைந்தது. 5 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய விதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேவாலயம் மீண்டும் வழிபாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
விமரிசையாக நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்க போப் பிரான்சிஸ், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்ப் ஆகியோர் வருகை தந்துள்ளனர். பிரிட்டன் மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் 50 நாட்டு தலைவர்களும் பாரிஸில் குழுமியுள்ளனர்.
இது தவிர ஆயிரத்து 500 விருந்தினர்களும் விழாவில் பங்கேற்க உள்ளனர். திறப்பு விழாவை ஒட்டி தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேவாலய திறப்பை அடுத்து சிறப்பு வழிபாடுகளும் நடக்க உள்ளன. பல்வேறு நாட்டு தலைவர்கள் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.