ரத்தப்போக்கு கண் வைரஸ் அல்லது மார்பர்க் வைரஸ் என்று அழைக்கப்படும் புதிய வகை வைரஸ் மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸால் ருவாண்டாவில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Bleeding eye அதாவது ரத்தப்போக்கு கண் வைரஸ் அல்லது மார்பர்க் என்ற அழைக்கப்படும் புதியவகை வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள், மூக்கு, வாய் வழியாக ரத்தம் வடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர காய்ச்சல், தலைவலி, தாங்க முடியாத உடல் வலி ஆகியவை ஏற்படும் என்றும் அவைதான் இந்த அறிகுறி என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 50 சதவீத பேருக்கு மரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மார்பர்க் அல்லது ரத்தப்போக்கு கண் வைரஸால் ருவாண்டாவில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வைரஸ் தொற்று உலகின் 17 நாடுகளில் பரவி உள்ளது.
இந்த வைரஸ் ரத்தம் மற்றும் உமிழ்நீர் மூலம் பரவுவதால் இதனை தடுப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மார்பர்க் வைரஸ் மனித குலத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய வைரஸ்களில் ஒன்று என WHO தெரிவிக்கிறது. இந்த கொடூரமான மார்பர்க் வைரஸ் பரவலால் இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவிற்கு பயணிக்கும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை என்றும் உலக சுகாதரா அமைப்பான WHO தெரிவித்துள்ளது. இந்த மார்பர்க் வைரஸ் 1967 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் ஆகும். ‘பிளீடிங் ஐ’ வைரஸ் என்றும் அழைக்கப்படும் புதிய வைரஸ் பரவுவதற்கு எதிராக பயணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
50 சதவீத மரண அபாயத்துடன் பரவி வரும் இந்த மார்பர்க் வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே Mpox, Flu என பல வைரஸ் தொற்றுகளுடன் போராடி வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த பிளீடிங் ஐ பெரும் தலைவலியாக மாறியுள்ளது.