அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்று, ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர் பதவியேற்ற பின்னர், நிர்வாகரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிவித்து வருகிறார். குறிப்பாக, குடியேற்றம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை இலக்காகக் கொண்டு, பதவியேற்ற முதல் நாளிலேயே மிகப்பெரிய நிர்வாக உத்தரவுகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ட்ரம்ப் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், உடனடியாக நாடு திரும்புமாறு (சொந்த நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில்) அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “நாட்டிற்குள் மீண்டும் நுழைவதில் சிரமத்தைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பான வழி, ஜனவரி 19 மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் அமெரிக்காவில் இருக்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் சீனாவைவிட இந்திய மாணவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. சர்வதேச கல்வி பரிவர்த்தனையின் ஓப்பன் டோர்ஸ் 2024 அறிக்கையின்படி, 331,602 இந்திய மாணவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட குறிப்பிடத்தக்க 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மக்கள்தொகை இப்போது அமெரிக்க கல்வி சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கியமான பகுதியாக உள்ளது.