அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஹசீனாவிற்குப் பிறகு அங்கு சிறுபான்மை மக்கள்மீது அதிக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், வங்கதேச நாட்டின் கரன்சியில் முஜிபுர் ரஹ்மான் படம் இடம்பெற்றுள்ளது. தற்போது அவரது புகழை குறைக்கும் வகையில் கரன்சியில் இருந்து நீக்க முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த நாட்டு மத்திய வங்கியின் கூற்றுப்படி, இடைக்கால அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்பேரில் டாக்கா 20, 100, 500 மற்றும் 1,000 மதிப்பிலான கரன்சிகள் அச்சிடப்படுகின்றன. இந்த கரன்சிகளில் முஜிபுர் ரஹ்மான் பெயர் இடம் பெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கரன்சிகளில் முஜிபுர் ரஹ்மான் பெயர் இடம்பெறக்கூடாது. அதற்குப் பதிலாக மதம் சார்பான கட்டமைப்புகள், பெங்காலி பாரம்பரியம் மற்றும் போராட்டத்தின்போது தீட்டப்பட்ட Graffiti ஆகியவை கரன்சியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக, நான்கு வடிவிலான கரன்சியின் டிசைன் மாற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் மற்றவை படிப்படியாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கரன்சிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் சந்தைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
வங்கதேச நாடு உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர், முஜிபுர் ரஹ்மான். இவர், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் ஆவார். நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்படும் இவரது சிலை, மாணவர்கள் போராட்டத்தின்போது சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.