உலகம் முழுவதும் மட்டுமல்ல இந்தியாவிலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், விஞ்ஞானிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வு:
புற்றுநோய் செல்களை 99% அகற்றும் அதிசய வழி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
புற்றுநோய் செல்களின் சவ்வை உடைக்கும் திறன் கொண்ட மூலக்கூறு:
நேச்சர் கெமிஸ்ட்ரி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், புற்றுநோய் செல்களை அழிக்க விஞ்ஞானிகள் ‘அகச்சிவப்பு ஒளியை’ பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நுட்பத்தில், புற்றுநோய் செல்களின் சவ்வை உடைக்கும் திறன் கொண்ட ‘அமினோசயனைன்’ என்ற மூலக்கூறு (Aminocyanine molecules)பயன்படுத்தப்பட்டது. இந்த மூலக்கூறுகள் உயிரி இமேஜிங் மற்றும் புற்றுநோயைக் கண்டறிவதற்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கும் ஆற்றல்:
ரைஸ் பல்கலைக்கழக வேதியியலாளர் ஜேம்ஸ் டூர் அமினோசயனைன் என்ற மூலக்கூறு, முந்தைய புற்றுநோயைக் கொல்லும் மூலக்கூறுகளை விட மில்லியன் மடங்கு வேகமானது எனவும். புதிய தலைமுறை மூலக்கூறு இயந்திரங்கள் மூலம் செயல்படும் வகையில் இருக்கும், இவை புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கும் என்றும் கூறினார். அகச்சிவப்பு ஒளி மூலம் இவற்றை உடலின் ஆழத்தை அடைந்து புற்றுநோய் செல்களை அழித்து விடும்.
புதிய தொழில்நுட்பம் செயல்படும் விதம்:
அமினோசயனைன் மூலக்கூறுகள் அகச்சிவப்பு ஒளியுடன் தொடர்பு கொள்ளும்போது அதிர்வுறும். இந்த அதிர்வு புற்றுநோய் செல்களின் சவ்வை உடைத்து அவற்றை முற்றிலும் அழிக்கிறது. இந்த நுட்பத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், அறுவை சிகிச்சை இல்லாமல் உடலின் ஆழத்தை அடைவதன் மூலம் எலும்புகள் மற்றும் உறுப்புகளில் இருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, குணப்படுத்த முடியும்.
புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி:
ஆராய்ச்சியாளர்கள் இந்த நுட்பத்தை ஆய்வகத்தில் வளர்ந்த புற்றுநோய் செல்களில் முயற்சி செய்து 99% வெற்றியை அடைந்தனர். இது தவிர, அவர்கள் இந்த தொழில்நுட்பத்தை எலிகளிலும் பரிசோதித்தனர். ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி சிசரோன் அயலா- ஓரோஸ்கோ கூறுகையில், புற்றுநோய் செல்களை அழிக்க மூலக்கூறு அளவில் இயந்திர சக்திகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த தொழில்நுட்பம் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சியை கொண்டு வர முடியும்.