உக்ரைன் ஒரு புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக அதன் விமானப் படைத் தலைவர் வடிம் சுகாரெவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட உதவிகளைச் செய்திருப்பதாக அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன.
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்கூட, இந்தப் போரினால் ரஷ்யாவின் அணு ஆயுதப் படை தளபதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உக்ரைன் ஒரு புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக அதன் விமானப் படைத் தலைவர் வடிம் சுகாரெவ்ஸ்கி தெரிவித்துள்ளார். Tryzub எனப் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் 2 கிலோமீட்டர் (1.2 மைல்கள்) உயரத்தில் விமானங்களைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. Tryzub என்பது உக்ரைன் நாட்டின் தேசிய சின்னமான மூன்று முள் வாளுக்கு (திரிசூலம்) இணையான பெயருடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இது சுதந்திரம், சக்தி மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது. மெதுவாகப் பறக்கும், குறைந்த உயரத்தில் உள்ள ட்ரோன்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் இது திறமையானதாகக் கருதப்படுகிறது. இது 2014-இல் அறிமுகமான அமெரிக்காவின் லேசர் ஆயுத முறைமை LaWS-ஐச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற லேசர் ஆயுதங்கள் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. வணிகரீதியிலான வேல்டிங் லேசர்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் இது நடைமுறையில் சாத்தியமாகும் என ஆயுத ஆராய்ச்சி நிபுணர் பேட்ரிக் சென்ஃட் கூறியுள்ளார்.
இது, உக்ரைனின் டிரைசூப் சோதனையில் வெற்றி பெற்றால், அது ரஷ்ய ட்ரோன்களை எதிர்க்க முக்கியக் கருவியாக அமையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், உக்ரைன் இதை எவ்வாறு உருவாக்கியது என்பது தெரியவில்லை என்றாலும், சில பாதுகாப்பு வல்லுநர்கள் இது இங்கிலாந்தின் டிராகன்ஃபயர் வடிவமைப்பிலிருந்து உத்வேகம் பெற்றிருக்கலாம் என்று நம்புகின்றனர்.
இந்நிலையில் லேசர் ஆயுதங்களை வைத்திருக்கும் பட்டியலில் தற்போது உக்ரைனும் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் லேசர் ஆயுதங்களை உருவாக்கியுள்ளன. சமீபத்தில், தைவானிடம்கூட லேசர் ஆயுதம் இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த ஜூலை மாதம், தென்கொரியாகூட, வடகொரியா ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் லேசர் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்தியாவும் லேசர் ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. அதுபோல், உக்ரைனின் எதிரியான ரஷ்யாவும் உயர் ஆற்றல் லேசரை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.