உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க மற்றும் பிரிட்டனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா போர் தொடுத்தது. நேட்டோ அமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முயன்றதால், அதனை அழிக்க ரஷ்யா முடிவு செய்து இந்த போரை நடத்தி வருகிறது. இந்த போரில் இதுவரை பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகளாக நடைபெறும் இந்த போரை தற்போது 1000 ஆவது நாளை தாண்டி செல்கிறது. ஆனால் போர் மட்டும் முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்த நிலையில் உக்ரைனுக்கு வழங்கிய தொலைதூர தாக்குதல் நிகழ்த்தும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அனுமதி வழங்கியது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் எனவும் எச்சரித்தது. அதன்படி நேற்று உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்கியது. இதில் உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதங்களை சந்தித்தன.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் பேசுகையில், ரஷ்யாவை தாக்குவதற்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் நாடுகள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படும்.
உக்ரைனுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை நோக்கி எங்கள் ஆயுதங்களை ஏவுவோம்” என எச்சரித்தார். புதின் நேரடியாகவே அமெரிக்கா மற்றும் பிரிட்டனை எச்சரித்துள்ளார். ஏற்கனவே ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மறைமுக மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே ஜோ பைடன், உக்ரைனுக்கு கொடுத்த அனுமதியால் ரஷ்யா ஆத்திரத்தில் தன்னிடம் உள்ள ஆயுதங்களை எல்லாம் ஒன்று திரட்டி வருகிறது.