உலகிலேயே காஸ்டிலியான, டிரெண்டிங்கான உணவாக சிற்றுண்டியாக இருப்பது பீட்சா. இத்தாலிய நாட்டின் உணவாக இருந்தாலும் சென்னையில் கூட தெருவுக்கு தெரு பீட்சா பிரியர்கள் இருக்கிறார்கள். உலகின் மூலைமுடுக்கெல்லாம் கூட பீட்சா பிரியர்கள் இருக்கிறார்கள். அதன் சுவை, தனித்துவமான தயாரிப்பு கோடிக்கணக்கானவர்களை ஈர்த்திருக்கிறது. சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய உணவு தான் பீட்சா. கேஸ் சிலிண்டர் அடுப்பு, மின்சார அடுப்புகளில் தயாரிக்கப்படும் பீட்சா இப்போது எரிமலை குழம்பின் வெப்பத்திலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ தான் இப்போது வைரலாகியிருக்கிறது. உங்களுக்கு இந்த தகவல் ஆச்சரியமாக கூட இருக்கலாம். ஆனால் உண்மை தான்…. எரிமலை குழம்பின் வெப்பத்தில் நேரடியாக ஆபத்து அதிகம் மிகுந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் பீட்சா தயாரித்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
உலகமே சோஷியல் மீடியா என உருமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதில் கவனத்தை ஈர்க்க வித்தியாசமான முயற்சிகளை நெட்டிசன்கள் செய்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் அங்கு தாங்கள் எதிர்கொள்ளும் வித்தியாசமான அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுகின்றனர். அந்தவகையில், எரிமலை புகைந்து கொண்டிருக்கும், ஆபத்துகள் மிகுந்த இடத்தில் பீட்சா தயாரித்து சாப்பிடும் வீடியோவை எக்ஸ், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கின்றனர்.
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாத்தமாலா என்ற இடத்தில் தான் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது. எரிமலைகள் அதிகம் உள்ள, ஆபத்தும் அதிகம் இருக்கக்கூடிய இடம் தான் இது. குவாத்தமாலாவின் பிரபல சமையல் கலைஞரான மரியோ டேவிட் கார்சியா பீட்சா தயாரிப்பதில் முற்றிலும் புதிய முறையைக் கடைப்பிடித்துள்ளார். பாரம்பரிய அடுப்பில் பீட்சாவை சமைப்பதற்கு பதிலாக, எரிமலை சாம்பல் மற்றும் எரிமலைக் குழம்புகளில் நேரடியாக சமைக்கிறார். இந்த பீஸ்ஸாவை சமைக்கும் முறை ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவகையில் ஆபத்தானதும் கூட. ஏனெனில் இதில் பீட்சா சூடான எரிமலை சாம்பலில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி சமைக்கப்பட்ட பீட்சா ஒரு சிறப்பான சுவையுடன் இருக்கும் என நினைத்து அவர் இப்படி சமைத்திருக்கிறார். இருப்பினும், இந்த பீட்சா சில ஆபத்துகளால் நிறைந்துள்ளது, ஏனெனில் இது எரிமலை மற்றும் வாயுக்களுடன் தொடர்பு கொள்கிறது, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குவாத்தமாலாவின் இந்த பகுதியில், சல்பர் டை ஆக்சைடு வாயுவின் அளவு மிக அதிகமாக உள்ளது, இது எரிமலை வெடிப்புகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வாயு வளிமண்டலத்தில் நீடித்து காற்றின் தரத்தை பாதிக்கிறது. இருப்பினும், சாகசப் பிரியர்கள் இந்த தனித்துவமான பீட்சாவை சாப்பிடுவதற்காகவே அங்கு செல்கிறார்கள்.