காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய், மலேரியாவின் கடுமையான வடிவம் என தெரிய வந்துள்ளது.
காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வந்தது. குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் பான்சி சுகாதார மண்டலத்தில் மட்டும் இந்த நோய்க்கு 143 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. நாட்டில், கடந்த அக்டோபர் 29 முதல் இந்த நோய்க்குப் பாதிக்கப்பட்ட மக்களில் இதுவரை 592 பேர் இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நோயால் 6.25% இறப்பு விகிதம் இருப்பதாக அமைச்சகமும் தெரிவித்துள்ளது. மேலும், 200க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையே, அவர்களின் எச்சில் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், காங்கோவில் தீவிரமாக பரவி வரும் காணப்படாத நோய் பற்றிய விரிவான விளக்கத்தை உலக சுகாதார மையமான WHO வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த நோய் மலேரியாதான் என்று கண்டுபிடித்து உள்ளனர். இது மலேரியாதான் ஆனால், நோய் பாதித்த பலருக்கும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. இரண்டும் சேர்ந்த காரணத்தால் உடல்நிலை மோசமாக இவர்களுக்கு பாதித்து இருக்கலாம்.
அதாவது கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மலேரியா, ஏற்கெனவே இருந்த இணை நோய்கள் காரணமாக மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். தவிர, அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டபோது கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்கள் எனத் தெரிவித்துள்ளது.