கொரியா என்றாலே வட கொரியா, தென் கொரியா இடையிலான மோதல் போக்கு பலருக்கும் நினைவில் தோன்றும். இரண்டு நாடுகளும் வல்லரசு நாடுகளின் ஆதரவுடன் எதிரெதிர் அணியாக நிற்கின்றன. தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா ஏவுகணைகள் சோதனை நடத்தியது ஹாட் டாபிக்காக இருந்த நிலையில், தற்போது தென் கொரியா ஓர் அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது.
அதாவது, இரவோடு இரவாக தென் கொரியாவில் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமல்படுத்தி அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் பரபரப்பை கிளப்பினார். இதற்கான காரணம் குறித்து ஆராய்கையில், அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட் தென் கொரியாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் மக்கள் சக்தி கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு இடையில் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு நாடாளுமன்றம் முடங்கியது.
வட கொரியாவால் ஆபத்து
அதுமட்டுமின்றி வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல் தென் கொரியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் சுதந்திரம் மற்றும் அமைதியை பறிக்கும் வகையில் தேச விரோத சக்திகள் நுழைந்து விட்டன. இவற்றை ஒடுக்க தான் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்ததாக அதிபர் யூன் சுக் யோல் குறிப்பிட்டார். ஆனால் தென் கொரியா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 190 உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
தென் கொரியாவில் எதிர்ப்பு
எமர்ஜென்சியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். நாடாளுமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். அதிபருக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு எதிர்ப்புகள் வலுவடைந்து கொண்டே செல்வதை கவனித்த தென் கொரியா அதிபர், 6 மணி நேரத்தில் தனது எமர்ஜென்சி உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார்.
அதிபர் பதவி விலக வலியுறுத்தல்
இந்நிலையில் அதிபரின் நடவடிக்கையை காரணம் காட்டி எதிர்க்கட்சி புதிய பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன. மேலும் அதிபர் பதவி விலகும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தென் கொரியா அதிபர் எமர்ஜென்சியை அறிவித்தது அவருக்கே பெரிய தலைவலியாக மாறி நிற்கிறது.
சர்வதேச அளவில் வட கொரியா ஆதரவு நாடுகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. எந்த ஒரு சவாலையையும், அதிரடியையும் சந்திக்கும் அளவிற்கு தயாராகி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தென் கொரியாவை அடுத்தடுத்து நடவடிக்கைகளை உற்றுநோக்கி வருவதால் பரபரப்பு நீடித்த வண்ணம் உள்ளது.