பென்சில்வேனியா மாகாணத்திற்கு சென்ற டொனால்ட் டிரம்ப் ஒரு கடையில் பிரெஞ்ச் பிரைஸ் சமைத்து வாடிக்கையாளா்களுக்கு வழங்கினார்.
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் உள்ளார். அவரது பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் 15 நாட்கள் கூட இல்லாத நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு எதிராக களம் இறங்கி உள்ள முன்ளா் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சார யுக்திகளை மாற்றி கொண்டே வருகிறார். எனினும் இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தான் அதிபராக வெற்றி பெறுவார் என கூறப்பட்டு வருகிறது. இருவரும் அமெரிக்க மக்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகள், வளர்ச்சி திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்கி உள்ளன. எனினும் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது.
இதற்கிடையே கமலா ஹாரிசுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவ்வாறு பிரச்சாரம் செய்யும்போது டொனால்ட் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாாணத்தில் உள்ள பிட்ஸ்பெர்க் பகுதியில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பிரெஞ்ச் பிரைஸ் சமைத்த டிரம்ப்:
அதே சமயம் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். டொனால்ட் டிரம்பை அதிபராக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிரம்ப் பல்வேறு திட்டங்களையும் வகுத்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில் பென்சில்வேனியா மாகாணத்திற்கு பிரச்சாரம் சென்ற டொனால்ட் டிரம்ப், அங்குள்ள பிரபல பாஸ்ட் புட் கடைக்கு சென்றார்.
பின்னா் தனது கையால் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்து, வாடிக்கையாளா்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார். டொனால்ட் டிரம்ப்பிற்கு பிரெஞ்ச் பிரைஸ் செய்வதற்கு தெரியாது என கூறப்படுகிறது. எனவே, அவர் அங்கிருந்த ஊழியா் உதவியுடன் பிரெஞ்ச் பிரைஸ் செய்வது எப்படி என்பதை கற்று கொண்டார். தற்போது இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.